×

ஹமாஸ் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் காசாவின் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை: நோயாளிகள், குழந்தைகள் பயத்தில் அலறல்

கான் யூனிஸ்: ஹமாஸ் படையினர் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் காசாவின் மிகப்பெரிய ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. வடக்கு காசாவில் தரைவழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் உள்ள மிகப்பெரிய ஷிபா மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளது. சர்வதேச போர் விதிகளை மீறி இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்து திடீர் சோதனை நடத்தி உள்ளது. அங்குள்ள நோயாளிகள், குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் நோயாளிகள், குழந்தைகள் பயத்தில் அலறித் துடித்ததாக அவர்கள் கூறி உள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் விடுத்த அறிக்கையில், ‘ஹமாஸ் படையினர் பதுங்கியிருக்கிறார்கள் என்பதற்கான சோதனை மட்டுமே இது. பணயக் கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது ’ என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் ராணுவமும், பீரங்கிகளும் நுழைந்திருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனையை சுற்றிலும் குண்டு சத்தம் தொடர்ந்து கேட்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். இஸ்ரேல் படையினர் மருத்துவமனையில் நுழைந்ததற்கு காசா சுகாதார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச போர் விதிகளின் அப்பட்டமான மீறல் என்றும், மனித பேரழிவை ஏற்படுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் ராணுவம் யாரையும் அனுமதிப்பதில்லை. இதனால் அங்கு 180க்கும் மேற்பட்ட சடலங்கள் கிடந்து நிலைமை மிக மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

The post ஹமாஸ் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் காசாவின் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை: நோயாளிகள், குழந்தைகள் பயத்தில் அலறல் appeared first on Dinakaran.

Tags : Gaza ,Shiba ,Hospital ,Hamas ,Khan Younis ,Israel ,Dinakaran ,
× RELATED காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி